மக்களைச் சார்ந்ததே கலையும் கலைஞர்களும்!

 

 

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை கொன்றதோடு மட்டுமின்றி, உலகமே அதிர்ச்சியடைந்த ஒரு அந்த பெரும் படுகொலையின் தடயங்களை அழிக்கும் பணியில் இன்றுவரை ஈடுபட்டுவரும் சிறிலங்க அரசை உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துவருகின்றன.

 

 

WDசொந்த நாட்டு மக்கள் மீதே தடை செய்யப்பட்ட, பெரும் நாசம் ஏற்படுத்தவல்ல கொத்துக் குண்டுகளையும், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளையும், கனரக ஆயுதங்களையும் பயன்படுத்திக் கொன்ற சிறிலங்க அரசிற்கு எதிராக போர்க் குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்தது ஆகியன தொடர்பான விசாரணை நடத்த வேண்டும் என்று உலக நாடுகளும், தமிழக, புலம் பெயர்ந்த தமிழர்களும் விடுத்த வலிமையான கோரிக்கையை அடுத்து, ஐ.நா.வின் உறுப்பு நாடுகளால் கையெழுத்திடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனங்களின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை கூற மனித உரிமைப் பிரகடனங்களில் தேர்ச்சி பெற்ற மூன்று நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

 

ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்துள்ள இந்த ஆலோசனைக் குழுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது மட்டுமின்றி, அக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்று மகிந்த ராஜபக்ச அரசு கூறியுள்ளது. ஐ.நா. அமைத்த குழுவை எதிர்த்து அந்நாட்டு அமைச்சர் கொழும்புவிலுள்ள ஐ.நா.வின் மேம்பாட்டுத் திட்ட அலுவலகத்தின் முன் பட்டினிப் போராட்டம் நடத்தி, அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் வெளியில் வரமுடியாத அளவிற்கு சிக்கலை ஏற்படுத்தினார். இதற்கு பன்னாட்டு அளவில் கண்டனம் எழுந்த நிலையில், அந்த பட்டினிப் போராட்டத்தை ராஜபக்சவே சென்று முடித்து வைத்தார்.

 

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த அந்தப் போரின் இறுதி கட்டத்தில் நடந்த படுகொலைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஐரோப்பிய ஒன்றியம், அதற்கு செவிமடுக்க சிறிலங்க அரசு மறுத்ததையடுத்து அந்நாட்டுப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அளித்து வந்த வணிக முன்னுரிமை வரிச் சலுகையை (General System of Preference - GSP+) நிரந்தரமாக நிறுத்துவதாக அறிவித்தது.

 

ஐஃபா விழாவை புறக்கணித்தது ஏன்?

 

 

WDஇப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழாவை (ஐஃபா) நடத்த இந்திய தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) முயற்சி மேற்கொண்டது. தமிழினப் படுகொலையை மூடி மறைக்கும் உள்நோக்குடனேயே இந்த விழா அங்கு நடத்தப்படுகிறது என்று கூறி, அந்த விழாவை கொழும்புவில் நடத்தக் கூடாது என்று தமிழின அமைப்புகளும், கட்சிகளும் எதிர்ப்பு காட்டின.

 

தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அரசிற்கு கண்டனமும் எதிர்ப்பும் காட்டும் வகையில் கொழும்புவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவை புறக்கணிப்பது என்றும், அதற்குப் பிறகும் இலங்கையில் சென்று படபிடிப்பு வேலையில் ஈடுபடுவதில்லை என்றும், இத்தடையை மீறிச் செல்பவர்கள் நடிக்கும் படங்களை தென்னிந்தியாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கமும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கமும், திரைப்பட விநியோகம் செய்யும் அமைப்பும், திரையரங்க உரிமையாளர்கள் அமைப்பும் ஒன்றிணைந்து முடிவு செய்து அறிவித்தன.

 

தமிழினத்தின் ஒன்றுபட்ட இந்தக் கூட்டு நடவடிக்கையின் விளைவாக எழுந்த எதிர்ப்பின் காரணமாக கொழும்பு ஐஃபா விழா முழுத் தோல்வியடைந்தது. தமிழரின் நியாயமான உணர்வை மதித்த தென்னிந்திய நடிகர்களும், அமைப்புகளும் முழுமையாக ஆதரவளித்தன.

 

இலங்கையை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை இதுதான். தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அந்த இனப் படுகொலைப் போரினால் எந்தப் பாதிப்பிற்கும் ஆளாகாத நாடுகளும், அமைப்புகளும், மானுடமும் அந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களோடு தொப்புள் கொடி உறவுகள் என்று கூறிக்கொள்ளும் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்பை முனை மழுங்கச் செய்யும் நடவடிக்கைகள் உதிக்கத் தொடங்கியுள்ளதுதான் வருத்தமான விடயமாகும்.

 

அப்படிபட்ட ஒரு எதிர் நடவடிக்கையை முன்னெடுக்கும் விதமாகவே தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் சரத் குமார் அளித்துள்ள பேட்டி அமைந்துள்ளது.

 

நடிகை அசின் இந்தித் திரைப்பட பட‌ப்பிடிப்பிற்காக இலங்கை சென்றது தவறல்ல என்று கூறியுள்ள சரத் குமார், படபிடிப்பு நடைபெற வேண்டிய இடத்தை தேர்வு செய்வது இயக்குனரும், தயாரிப்பாளரும்தான், அவர்கள் தேர்வு செய்யும் இடத்தில் சென்று நடிக்க வேண்டியதுதான் நடிகர்களின் வேலை என்றும் கூறியுள்ளார்.

 

அது மட்டுமல்ல, “இலங்கையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்ற போது, அந்த விழாவில் நடிகர், நடிகைகள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு தடை விதித்தது. அதை ஏற்றுக்கொண்டு தமிழ் நடிகர் நடிகைகள் அந்த விழாவை புறக்கணித்தனர். அந்தத் தடை அந்த விழாவோடு முடிந்துபோய்விட்டது. அதற்குப் பிறகும் யாரும் அங்கு செல்லக்கூடாது என்று தடை விதிப்பது முறையல்ல” என்றும் சரத் குமார் கூறியுள்ளார்.

 

நடிகர் சரத் குமார் கூறியுள்ளது சரியா இல்லையா அல்லது ஏற்றுக்கொள்ளத் தக்கதா என்பதை தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்புதான் முடிவு செய்ய வேண்டும்.

 

ஆனால், எந்த காரணத்திற்காக அந்த புறக்கணிப்பை திரைப்பட கூட்டமைப்பு செய்ததோ, எந்த அடிப்படையில் இலங்கை செல்லக்கூடாது என்று நடிகர், நடிகை உள்பட அனைவருக்கும் தடை விதி்த்ததோ அந்த நிலை மாறிவிட்டதா என்பதே கேள்வியாகும்.

 

ஈழத் தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க ஐ.நா. போராடுகிறது. நியூயார்க்கில் இருந்து செயல்பட்டு வரும் மனித உரிமைக் கண்காணிப்பகம் (Human Rights Watch - HRW), சர்வதேச பொது மன்னிப்புச் சபை (Amnesty International), பன்னாட்டு சிக்கல் தீர்வுக் குழு (International Crisis Group-ICG), எல்லைகள் அற்ற பத்திரிக்கையாளர்கள் அமைப்பு (Reporters Sans Frontier - RSF) போன்ற சர்வதேச அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கின்றன. இவர்களோடு தனது சொந்த பந்தங்களை இழந்து உலக நாடுகளின் தெருக்களில் மூச்சைப்பிடித்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறது புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழினம்.

 

தமிழ்நாட்டிலோ விவரம் தெரிந்த ஒவ்வொரு தமிழரும் தனது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவும், அதற்கு தனது நாட்டின் அரசு அப்பட்டமாகத் துணைபோனது கண்டும் கோபத்தின் உச்சத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

 

 

FILEஆனால் சரத் குமார், “இலங்கைக்கு கிரிக்கெட் வீரர்கள் செல்கிறார்கள், சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள், கணினி நிறுவனங்கள் பல வர்த்தகம் செய்துக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கும்போது ஒரு நடிகை செல்வது எப்படித் தவறாகும்” என்று கேள்வி எழுப்புகிறார்.

 

இந்திய கிரிக்கெட் வீரர்களும், சுற்றுலா பயணிகளும், கணினி நிறுவனங்களும் போகிறார்கள், சரி, அது நியாயம் தானா? என்பதே கேள்வி. சொந்த நாட்டு மக்கள் ஒன்றரை இலட்சம் பேரை கொன்று குவித்த நாட்டில் சென்று வணிகம் செய்யச் செல்லாதீர்கள் என்று கூறித்தானே ஃபிக்கி அமைப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அதன் விளைவுதானே ஐஃபா விழாவைத் தொடர்ந்து நடந்த உலக வர்த்தக மாநாடு (Global Business Summit) தோல்வியில் முடிந்தது! அதன் தொடர்ச்சிதானே தமிழின அமைப்புகள் அறிவித்துள்ள ஏர்டெல் புறக்கணிப்பு போராட்டம்!

 

ஆக, இனப் படுகொலை செய்துவிட்டு அதனை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசை எதிர்க்க, அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக் கூடாது என்பதுதான் தமிழர்கள் மட்டுமல்ல, மனிதாபிமானமுள்ள மனிதர்களின் கோரிக்கை.

 

மீனவர்கள் நம் மக்களல்லவா?

 

இப்போது கூட என்ன நிலை? ஒரு வாரத்திற்கு முன்னர் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர் சி்றிலங்க கடற்படையினரால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளாரே. மேலும் 4 மீனவர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு கரைக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளனரே.

 

ஏன் நேற்று முன் தினம் இரவு கூட கச்சத் தீவு கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை அங்கு வந்த சிறிலங்க கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்துள்ளனரே. இது நியாயம்தானா? தமிழக கடற்பகுதியில் வந்து மீன் பிடிக்கும் சிறிலங்க மீனவர்களை எப்போதாவது மிகவும் சக்தி வாயந்த கடலோர காவற்படை இப்படி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதா? காயப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளதா? வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டியுள்ளதா? அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை அபகரித்துக்கொண்டு, வலைகளை அறுத்துக் கடலில் எறிந்ததுண்டா? இப்படிப்பட்ட அநியாயங்களைக் கண்டிக்கவும் எதிர்க்கவும் முற்படும் தமிழினத்தின் ஒரு அங்கமல்லவா தமிழ்த் திரைப்பட உலகம்?

 

 

FILEசரத் குமார் இவ்வாறு பேட்டியளித்துள்ளது ஒரு ஆச்சரியமல்ல, ஏனென்றால், ஐஃபா விழாவை புறக்கணித்து எடுக்கப்பட்ட முடிவில் அந்த வேறுபட்ட கருத்து கொண்டிருந்தார் என்பது ஒரு ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சியி்ல் அவர் பேசியதைக் கண்டவர்கள் அறிந்திருக்கின்றனர். அது மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் ஒரு வித ‘தொடர்புகள்’ உண்டு. அதையெல்லாம் அறிந்தே உள்ளது தமிழ்நாடு. ஆனால் தமிழ்த் திரையுலகம் என்ன செய்யப் போகிறது என்பதுதான் கேள்வி. ஏனெனில் சரத் குமார் பேட்டிக்குப் பின் ஒரு ‘அமைதி’ நிலவுகிறது. ஏனென்றால் தமிழக முதல்வரை சந்தித்துவிட்டு வந்த பிறகு இந்த பேட்டியை சரத் குமார் அளித்துள்ளார் என்பதே.

 

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே. மக்களில் இருந்து பிறந்து மக்களை நோக்கியே கலைப் பயணம் நடக்கிறது. வரலாற்றுக் காலம் தொடங்கி மக்களைச் சார்ந்தே கலையும், கலைஞர்களும் இருந்து வந்துள்ளனர். எனவே மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில் அவர்கள் மிக உறுதியாக மக்களைச் சார்ந்தே நின்றிருக்கிறார்கள். தமிழ்த் திரைப்பட உலகம் மாறிச் சென்றிடுமா என்ன?

 

webdunia